top of page

ஏனாத்தூர் (எ) ஏனாதி புதூர் -இன் பெயர் காரணம்.

சோழநாட்டில் உள்ள ஊர் எயினனூர். அந்தவூரில் ஈழ குலத்தில் தோன்றியவர் ஏனாதி நாதர். திருநீற்றினிடத்து அன்பு செலுத்துவதும் மன்னர்க்குப் படைக்கலப் பயிற்சி அளித்தலும் அவரது தொழில். அவர், தம் தொழிலால் வரும் பொருளைச் சிவனடியார்க்குப் பயன்படுத்துவார்.

 

ஈழ குலத்திலே அதிசூரன் என்பவன் ஒருவன் இருந்தான். அவனது தொழிலும் படைக்கலப் பயிற்சி அளிப்பதே ஆகும். அத்தொழிலில் ஏனாதி நாதர்க்கு வருவாய் அதிகம் வந்ததால் அதிசூரன் அவர் மீது பொறாமை கொண்டான். அதனால் அவன் அவர் மீது படையுடன் போர் செய்ய வந்தான். போரில் வெல்பவரே போர்ப் பயிற்சி அளிக்கும் உரிமை பெற்றவர். எனவே போருக்கு வருக! என்று அழைத்தான். ஏனாதிநாதரும் போருக்குச் சளைக்கவில்லை! போருக்குப் புறப்பட்டார் படையுடனே! அதிசூரன் தோற்று ஓடினான்.

 

வீரத்தால் ஏனாதி நாதரை வெல்ல முடியாது. அவன் வஞ்சனையால் வெல்ல எண்ணினான். மறுநாள் அவன் தன்னுடன் தனியே போர் செய்யவருமாறு ஓர் ஏவலன் மூலம் சொல்லி அனுப்பினான். அதிசூரன் நெற்றியில் திருநீறு பூசிச் சிவனடியார் கோலத்துடன் போருக்கு வந்தான். முதலில் அவன் தன் நெற்றியைக் கேடயத்தால் மறைத்திருந்தான். பின் கேடயத்தை விலக்கித் தன் திருநீறு அணிந்த நெற்றியைப் புலப்படச் செய்தான். அப்போது ஏனாதி நாதர் இவர் இன்று சிவனடியார் ஆனார். எனவே இவர் கருத்துக்கு இசைய அவர் என்னைக் கொல்ல ஆயுதம் இன்றி நிற்பேன்! என நினைத்தார். பின், ஆ! நான் ஆயுதம் இன்றி நின்றால், இவர் நிராயுதபாணியான என்னைக் கொன்றார் என்ற பழியுண்டாகும்!. எனவே, நான் படைக்கலம் ஏந்திப் போர் செய்வதைப் போல் நிற்பேன் என்று எண்ணி நின்றார். அதிசூரன் தான் எண்ணியதை எண்ணிய வண்ணமே செய்து முடித்தான். திருநீற்றுக்காக உயிர் அளித்த ஏனாதி நாதர் சிவபெருமானின் திருவடி நிழலை அடைந்தார்.

 

இத்தகு பெருமை வாய்ந்த ஏனாதி நாதர் இக்கிராமத்தில் தங்கியதன் நினைவாகவே இக் கிராமத்திற்கு ஏனாதி புதூர் என்ற பெயர் பெற்றதாகவும், இதுவே நாளடைவில் மருவி ஏனாத்தூர் என்றானதாகவும் கூறப்படுகிறது.

bottom of page